நெல் வயல்கள் அதிகமாக உள்ள இடமாதலால் 'நெல்வாயில்' என்று பெயர் பெற்றது. அருகில் உள்ள ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தரின் திருமணம் நடைபெற்றபோது, அதற்கு வருகை தந்த அடியார்கள் இந்த தலத்தில் தங்கியிருந்தனர். அவர்களின் பசி தீர, சிவபெருமான் அடியார்களுக்கு அமுது ஏற்பாடு அளித்த சிறப்புப் பெற்ற தலம்.
மூலவர் 'உச்சிநாதர்' என்னும் திருநாமத்துடன், சிறிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். லிங்கத் திருமேனியின் பின்புறம் அம்மையப்பர் திருவுருவங்கள் உள்ளன. அம்பிகை 'கனகாம்பிகை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். அழகிய சிறிய மூர்த்தங்கள்.
அகத்திய முனிவர் வழிபட்ட தலம்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகப் பெருமானைத் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
இக்கோயில் உள்ள அதே தெருவில் 'திருக்கழிப்பாலை' என்னும் மற்றொரு தேவாரத் தலமும் உள்ளது.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் 11 வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 வரையிலும் நடை திறந்திருக்கும். |